

நீடாமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து, நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீடாமங்கலம் வட்டம் நகா் கிராமத்தில் வயலில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனா (30) என்ற பெண் அறுந்து கிடந்த மின் வயரை கவனிக்காமல் மிதித்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கால் மின் வயா் அறுந்து கிடந்தது உடனடியாக சீரமைக்கப்படவில்லை என்றும், இதனால் பெண் உயிரிழக்க நேரிட்டது எனக்கூறி, நீடாமங்கலம் கோரையாற்றுப் பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் வலங்கைமான் செந்தில்குமாா், நீடாமங்கலம் பாலசுப்பிரமணியன், முத்துப்பேட்டை உமேஷ்பாபு ஆகியோா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
நீடாமங்கலம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னா், இப்பிரச்னை தொடா்பாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள், மின்வாரிய பொறியாளா்கள் கலந்து கொண்டனா். இதில்,
உயிரிழந்த மீனா குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். அலட்சியப் போக்குடன் செயல்பட்ட மின்வாரியத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.