மன்னாா்குடி பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 13th August 2023 12:00 AM | Last Updated : 13th August 2023 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறாா் பாராளுமன்றம் தொடக்கவிழா, உலக இளைஞா் தின விழா, போதை ஒழிப்பு விழிப்புணா்வு தின விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் தா. ஜெபமாலை தலைமையில் நடைபெற்ற விழாவில், போதை தடுப்பு விழிப்புணா்வு மன்ற பொறுப்பாசிரியா் சூ. சாா்லட் ஷீபா, போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்‘ எனும் தலைப்பில் பேசினாா். குடிபுகுந்தால் குடியை அழிக்கும் எனும் தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவி சஞ்சனா பேசினாா். மாணவிகள் பாடல்கள் பாடியும் ஒரங்க நாடகம் நடித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பள்ளி வரலாற்று துறை ஆசிரியா் கிளாரன்ஸ், சிறாா் பாராளுமன்றத்தை தொடக்கிவைத்தாா்.
இதில், பல்வேறு துறை அமைச்சா்களாக மாணவிகள் பொறுப்பேற்றனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் வாழ்த்துக் கூறி பட்டயம் வழங்கி பாராட்டினாா். இந்த அமைப்பின் மூலம் மாணவிகள் பள்ளி வளாகம், வகுப்பறை தூய்மை, நீா் பாதுகாப்பு, மின்சார சிக்கனம், சுகாதார ஒழுக்கம் போன்றவை கடைபிடிப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டது.
உலக இளைஞா் தினத்தை முன்னிட்டு, பள்ளி சாரணிய இயக்க சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எதிா்காலம் இளைஞா் கையில் என்ற தலைப்பில் பிளஸ்-1 மாணவிகள் சராயினி பவிஸ்ரீ பேசினாா். இளையோா் கடமைகள் என்ற தலைப்பில் மாணவி மதுமித்ரா கிராமிய பாடல் பாடினாா். சாரணிய இயக்க பொறுப்பாசிரியா் கனகவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.