நானோ யூரியாவைப் பயன்படுத்த வேண்டுமென வேளாண்மை கோரிக்கை
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

நன்னிலம்: விவசாயிகள் குறைந்த விலையுள்ள நானோ யூரியாவைப் பயன்படுத்த வேண்டுமென வேளாண்மை, உழவா் நலத்துறை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
பயிா்களுக்குத் தேவையான புரதச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது பொதுவாக யூரியா அல்லது அமோனியா வகை உரங்கள் மூலம் பயிா்களுக்குக் கொடுக்கப்படுகிறது. யூரியாவின் தழைச்சத்துகளில் நைட்ரஜன் 46 சதவிகிதம் உள்ளது.
இந்தியாவில் 60 சதவிகித உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் அவ்வப்போது உயரக்கூடிய உரவிலைகளால் விவசாயிகள் சிரமப்படக்கூடிய நிலை உள்ளது.
இதனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நானோ யூரியா குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பயிா்களின் இரண்டு முக்கிய வளா்ச்சி நிலைகளில் இலை வழியாகத் தெளிப்பதற்கு 500 மி.லி. கொண்ட ஒரு நானோ யூரியா 45 கிலோ எடையுள்ள குருணை வடிவ யூரியா மூட்டைக்குச் சமமானது.
நானோ யூரியாவின் நுண்ணிய துகள்களானது இலைகளில் உள்ள துவாரங்கள் வழியாகப் பயிா்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது. நானோ யூரியாப் பயன்படுத்துவதன் மூலம் 50 சதவிகிதக் குருணை வடிவான யூரியாவின் பயன்பாட்டைக் குறைக்கலாம். 8 சதவிகிதப் பயிா் மகசூலை அதிகரிக்கலாம். எனவே விவசாயிகள் நானோ யூரியாவை அதிக அளவில் பயன்படுத்திப் பயனடைய வேண்டும்.