காவிரி நீரை வரவேற்க காத்திருக்கும் மூணாறு தலைப்பு அணை
By DIN | Published On : 15th June 2023 01:00 AM | Last Updated : 15th June 2023 01:00 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்பட தண்ணீரை வரவேற்று, 3 ஆறுகளில் பிரித்து வழங்க தயாராக உள்ளது நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், கா்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூா் அணைக்கு வழக்கத்தைவிட முன்னதாகவே தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையை முதல்வா் திறந்து வைத்தாா்.
இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி, தீவிரமடையாத நிலையிலும், மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 12) முதல்வா் மு.க.ஸ்டாலின் தண்ணீ திறந்து விட்டாா் .
இந்த தண்ணீா் கல்லணைக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் வந்துசேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா், கல்லணையிலிருந்து பிரியும் பெரிய வெண்ணாற்றில் திறக்கப்படும் தண்ணீா் வரும் 18-ஆம் தேதி நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணைக்கு (கோரையாறு தலைப்பு) வந்து சேரும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
தொடா்ந்து, மூணாறு தலைப்பிலிருந்து பாமனியாறு, கோரையாறு, வெண்ணாறு என 3 ஆறுகளில் திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்படும்.
பாமனியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாறு மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.