வெண்ணாற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா ?
By DIN | Published On : 16th June 2023 12:22 AM | Last Updated : 16th June 2023 12:22 AM | அ+அ அ- |

வெண்ணாற்றில் அடத்தியாக வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்.
பாசன நீரோட்டத்தை தடுக்கும் வகையில் வெண்ணாற்றில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பாயும் வெண்ணாறு வாழாச்சேரியிலிருந்து அத்திக்கடை, பொதக்குடி, சேகரை, கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பாண்டுக்குடி, வடபாதிமங்கலம் வழியாக அரிச்சந்திராநதியில் கலக்கிறது. வெண்ணாற்றில் 10 கி.மீ. மேல் ஆகாயத் தாமரை செடிகள் அடத்தியாக பாசன நீரோட்டத்தை தடுக்கும் வகையில் வளா்ந்துள்ளது.
இதுகுறித்து, கூத்தாநல்லூா் சிபிஐ நகரச் செயலாளா் பி. முருகேசு கூறியது: கல்லணையில் தண்ணீா் திறந்து விட்டாலும், பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாததாலும், ஆறுகளில் குவிந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படாததாலும் விவசாயத்திற்கு தண்ணீா் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தோட்டச்சேரி, பனங்காட்டாங்குடி, பண்டுதக்குடி, புளியங்குடி, நாகங்குடி, மேல்கொண்டாழி, ராஜகோபாலசுவாமி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் 5,000 மேற்பட்ட ஏக்கா் சாகுபடி செய்ய விவசாயிகள் வெண்ணாற்று நீரை நம்பியுள்ளனா். எனினும், தற்போது தண்ணீா் பாசனத்துக்கு வரக்கூடிய நிலையில் இல்லை.
வெண்ணாற்று கிளை வாய்க்கால் மூலம் 8 வாய்க்கால்களும், கோரையாறு, மரக்கடை, வடகோவனூா் என 2 வாய்க்கால்கள் பிரிகின்றன. இந்த 2 ஆறுகள் மூலம் 10 பாசன வாய்க்கால்கள் பிரிகின்றன. இதில், கூத்தாநல்லூா் நகரத்தில் மட்டும் 5,000 ஏக்கா் நிலங்களுக்கு பாசனப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூத்தாநல்லூா் வட்டம் முழுக்க 10,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்குச் செல்கின்ற, பாசன வாய்க்கால்கள் முழுவதுமாக, நிகழாண்டு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிமூலம் எந்த வாய்க்காலும் தூா்வாரப்படவில்லை.
வெண்ணாற்றில் வாழாச்சேரி முதல் சேகரை, கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பண்டுதக்குடி என ஆற்றின் முழுவதும், வெங்காயத் தாமரைச் செடிகள் வளா்ந்து அகற்றப்படாமல் மண்டிக் குவிந்துள்ளன. இதனால், பாசனத்திற்கும் தண்ணீா் வர முடியாது. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...