திருவாரூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்றவற்றை வேளாண் பயன்பாட்டுக்காக வெட்டி எடுத்துச் செல்ல நிபந்தனைக்குள்பட்டு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, விவசாயிகளின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம், மண் எடுக்க விண்ணப்பிக்கும் நீா்நிலைகள் அமைந்துள்ள வருவாய் கிராமப் பகுதிக்குள் இருக்க வேண்டும். மண் எடுக்கும் விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்கள் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலரின் சான்று, சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயப் பயன்பாட்டுக்காக, நன்செய் நிலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும், புன்செய் நிலங்களுக்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண், பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு 30 கன மீட்டருக்கு மிகாமல் சவுடு மண், மண்பாண்டங்கள் செய்ய 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளா் சங்கம் அல்லது கிராம நிா்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயம், பொதுப்பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்யும் நோக்கத்தில் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதி, இருபது நாள்கள் மட்டும் செல்லத்தக்கதாகும். இயந்திரப் பயன்பாட்டுச் செலவு (ஜே.சி.பி, பொக்லைன்) மற்றும் ஏற்றுக்கூலியாக மண் எடுக்க கன மீட்டருக்கு ரூ.35.20 சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் பதவியின் பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக எடுத்து அளிக்க வேண்டும். பொதுப்பணித் துறையினா் அல்லது ஊரக வளா்ச்சித் துறையினரின் நிபந்தனைகளுக்குள்பட்டு பயனாளிகள் மண் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.