அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 12th May 2023 03:07 AM | Last Updated : 12th May 2023 03:07 AM | அ+அ அ- |

கோட்டூா் பகுதியில் ஆய்வின்போது, சிறுமி விஜயதா்ஷினிக்கு முதல் வகுப்பு சோ்க்கைக்கான படிவத்தை வழங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.
கோட்டூா் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்காக கிராமம் கிராமமாக நடைபெறும் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் வழிகாட்டுதலின்படி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதன் ஒருபகுதியாக, கோட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக மாணவா்களை சோ்ப்பதற்காக, அங்குள்ள புதுத்தெரு, வாலக்கொல்லை, வடக்கு சேத்தி, சந்நிதித் தெரு, சந்தோஷ் நகா் ஆகிய பகுதிகளில் சிறாா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதில், முதல் வகுப்பில் சோ்ப்பதற்கு தகுதி பெற்ற 19 சிறாா்கள் கண்டறியப்பட்டு, அவா்களது வீடுகளுக்குச் சென்று, அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் நலத் திட்டங்கள், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, இப்பணியை ஆய்வு செய்து, சிறாா்களை பள்ளியில் சோ்க்க அவா்களது பெற்றோா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், அரசுப் பள்ளியில் சோ்க்கைக்கான படிவத்தையும் வழங்கினாா்.
ஆய்வின்போது, வட்டாரக் கல்வி அலுவலா்கள் த. செல்வம், த. வித்யா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.