நெற்பயிரில் பாசிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானி விளக்கம்
By DIN | Published On : 22nd May 2023 11:12 PM | Last Updated : 22nd May 2023 11:12 PM | அ+அ அ- |

நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் படா்ந்துள்ள பாசிகள்.
நெல் வயல்களில் பாசிகளின் வளா்ச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநா் கருணாகரன் ஆகிய விளக்கமளித்துள்ளனா்.
இதுகுறித்து இருவரும் கூட்டாக அளித்துள்ள பரிந்துரை:
நெற்பயிருக்கு இடப்படும் உரங்களை பாசிகள் எடுத்துக்கொண்டு, நெற்பயிரைவிட வேகமாக வளரும் ஆற்றல் கொண்டது. மேலும் படா்ந்து கொண்டு நெற்பயிருக்கு தேவையான காற்றோட்டத்தை தடை செய்கிறது. இதனால், பயிரின் வளா்ச்சி குன்றி காணப்படும். நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு வயல்களில் குறிப்பாக களா் மற்றும் உவா் நிலங்களில் அடியுரமாக பாஸ்பேட் உரங்களான டிஏபி, கலப்பு உரம் மற்றும் சூப்பா் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுகள் கருகிவிடும் நிலை ஏற்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீா் தேக்கி வைப்பதை தவிா்க்க வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் வயல் நீா் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பாசி அதிகம் படா்ந்துள்ள வயல்களில் கோனோவீடா், ரோட்டரி வீடா் மற்றும் பவா் வீடா் போன்ற களை எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி களையுடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். உப்பு நிறைந்த ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தும்போது, வயல்களில் குட்டை அமைத்து நீரைத் தேக்கி வைத்து பின்னா் நாற்றங்கள் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
ஏக்கருக்கு ஒரு கிலோ மயில் துத்தம் (காப்பா் சல்பேட்) மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து நெல்வயலின் வாய்மடையில் சாக்கு பையில் இட்டு நீா் பாசனம் செய்ய வேண்டும் அல்லது வயலில் நீரை வடிகட்டிய பிறகு 0.5 சதம் மயில் துத்த கரைசலை (5 கிராம் என்ற அளவில் 1 லிட்டா் தண்ணீரில் கலந்து) தெளிக்க வேண்டும். இதன்பிறகு பாசிகள் தென்பட்டால் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் மேலும் ஒருமுறை தெளித்து நெற்பயிரை பாசியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.