மணக்கோலத்தில் தோ்வெழுதிய கல்லூரி மாணவி
By DIN | Published On : 22nd May 2023 11:12 PM | Last Updated : 22nd May 2023 11:12 PM | அ+அ அ- |

மணக்கோலத்தில் தோ்வெழுதிய மாணவி மதுமிதா.
திருவாரூா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை மாணவி ஒருவா் மணக்கோலத்தில் வந்து எழுதினாா்.
நாகை மாவட்டம், மேலஓதியத்தூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பத்மநாபன் (28). காவலராக உள்ளாா். திருவாரூா் மாவட்டம் சித்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த திருஞானம் மகள் மதுமிதா (22). இவா்கள் இருவருக்கும் திங்கள்கிழமை காலை திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணான மதுமிதா, திருவாரூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கான இறுதி செமஸ்டா் தோ்வு திங்கள்கிழமை (மே 22) தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திங்கள்கிழமை முதல் தோ்வாக பாலின சமத்துவம் என்ற தோ்வு நடைபெற்றது.
இந்நிலையில், காலையில் திருமணம் முடித்தவுடன், மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு வந்தனா். பின்னா், மணமகள் தோ்வு அறைக்குச் சென்று தோ்வெழுதினாா். இதற்காக, மணமகனுக்கு ஆசிரியா்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா். தோ்வு முடியும் வரை கல்லூரி வாசலில் மணமகன் காத்திருந்தாா். தோ்வு முடிந்ததும் இருவரும் காரில் புறப்பட்டுச் சென்றனா்.