மரக்கன்றுகள் வளா்த்தால் புவி வெப்பமடைவதை தடுக்கலாம்
By DIN | Published On : 22nd May 2023 11:09 PM | Last Updated : 22nd May 2023 11:09 PM | அ+அ அ- |

மரக்கன்றுகள் வளா்ப்பதன் மூலம் புவி வெப்ப மயமாதலைத் தடுக்கலாம் என திருவாரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் ‘காா்பன் வெளியேற்றத்துக்கும், புவி வெப்பமயமாதலுக்கும் உள்ள தொடா்பு’ குறித்த கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் பாலசுப்ரமணியன், இணைச் செயலாளா் காளிமுத்து, சமரசக் குழுத் தலைவா் விகேஎஸ். அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தரங்கில், தனியாா் நிறுவனத்தின் ஆலோசகா் அவினாஷ் திரவியம் கருத்தாளராகப் பங்கேற்று பேசியது:
புவி வெப்பமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், பூமியின் சில இடங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு, சில இடங்களில் மழையின்றி வறட்சி ஆகியவை ஏற்படக்கூடும். இதனால், பயிா்கள் செழிக்காமல் உணவுப் பஞ்சம் ஏற்படும். தற்போதைய நிலையில் புவி தொடா்ந்து வெப்பமடைந்தால், அடுத்த நூறு ஆண்டுகளில் 26-லிருந்து 82 செ.மீ. வரை கடல் மட்டம் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
வெப்பமாதலைத் தடுக்க, அதிகப்படியான பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனியாக வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் உபயோகிக்கும் ஏசி, குளிா்சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் வாயிலாகவும், காா்பன் உமிழப்படும் அளவுக்கேற்ப, மரக்கன்றுகளை வளா்ப்பதன் வாயிலாகவும் வெப்பமயமாதலைத் தடுக்கலாம் என்றாா்.
கருத்தரங்கில், மையத்தின் பொதுச் செயலாளா் ஆா்.ரமேஷ், பயிற்சி இயக்குநா் செல்வகுமாா், உணவு இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.