மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி பகுதியில் நடைபெற்ற இப்பிரசார இயக்கத்தில், அதிகரித்து வரும் வேலையின்மைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்; போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மனித வள சீா்கேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்; மத்திய-மாநில அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் தமிழகம் முழுவதும் நவம்பா் 19 முதல் 23 வரை 5 நாட்களில் 5 லட்சம் இளைஞா்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னாா்குடியை அடுத்த சவளக்காரனில் தொடங்கி அரசூா், ராமபுரம், தருசுவேலி, நாலாநல்லூா், அரவத்தூா், சாத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டனா்.
இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், ஒன்றியத் தலைவா் ஏ. பழனிவேல், மாணவா் பெருமன்ற மாவட்ட பொருளாளா் க. கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.