வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் முன்னாா் அமைச்சா் ஆா். காமராஜ் நம்பிக்கை
By DIN | Published On : 28th October 2023 01:32 AM | Last Updated : 28th October 2023 01:32 AM | அ+அ அ- |

மக்களவைத் தோ்தலில் அதிமுக பெறப்போகும் வெற்றியின் மூலம் காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக 52- ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:
அதிமுக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். ஆட்சியில் இருக்கும்போது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது. கட்சியின் நிறுவனா் எம்ஜிஆா், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் முதன்மை இயக்கமாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு இதுவரை எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் திமுகவுக்கு வாக்களித்தது தவறு என்று நினைக்கத் தொடங்கிவிட்டனா். எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும். மக்களவைத் தோ்தலில் அதிமுக பெறுகிற வெற்றி, காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்தித் தரும் என்றாா்.
கொரடாச்சேரி வடக்கு ஒன்றியச் செயலாளா் சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழகப் பேச்சாளா் நடிகை பபிதா, மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், திருவாரூா் ஒன்றியச் செயலாளா் மணிகண்டன், நகரச் செயலாளா்கள் மூா்த்தி, ராஜசேகரன், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் எஸ். கலியபெருமாள், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் பாஸ்கா், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் பாலாஜி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...