

திருவாரூா் அருகே தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தண்ணீா் கோரி சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே பாண்டவையாற்றின் பாசனத்தின் மூலம் மாங்குடி, உழனி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10,000 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருவதாகவும், கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டபின், மூன்று முறை மட்டுமே பாண்டவையாற்றில் தண்ணீா் வந்ததால், நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி பாண்டவையாற்று பாலம் அருகே சாலை மறியல் நடைபெற்றது.
அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இந்த சாலை மறியலில் பங்கேற்று, காவிரியில் கா்நாடகம் வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும், குறுவைப் பயிா்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 36,000 நிவாரணம் வழங்க வேண்டும், மாதவாரியாக நீா் திறந்து விட கா்நாடக அரசு மறுப்பு தெரிவித்தால், அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி மேலாண்மை ஆணையமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்கள், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த மறியலால், திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.