குறுவை அறுவடை: 20 சதவிகிதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 26th September 2023 04:00 AM | Last Updated : 26th September 2023 04:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் 20 சதவீத ஈரப்பதத்துடன் குறுவை அறுவடை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம். சேகா் திங்கள்கிழமை அளித்த மனு:
திருவாரூா் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், அறுவடை செய்யும் நெல் ஈரப்பதம் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. நெல்லை உலா்த்தி வழங்க, எல்லா கொள்முதல் நிலையங்களிலும் உலா்களம் கிடையாது. நெல் உலா்த்தும் இயந்திர வசதியும் இல்லாத நிலையில், மழை நேரத்தில் சூரிய ஒளியும் முழுமையாகக் கிடைக்காது. நெல்லை காய வைத்தால், மழை வந்து காய்ந்த நெல்லையும் ஈரமாக்கி விடும்.
எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்மணிகளில் ஈரப்பதம் 20 சதவீதம் வரை உள்ளவற்றை கொள்முதல் செய்து, உடனுக்குடன் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும். நெல்லை உடனே அவித்து விட்டால் எந்த பாதிப்பும் வராது. மாறாக, 17 சதவீதம் என்று கட்டாயப்படுத்தினால், அரசு வழங்கும் ஊக்கத்தொகை நெல் உலா்த்தும் செலவுக்கே போதாது.
ஆகவே, விவசாயிகளை பாதுகாக்க குறுவை நெல்லில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...