திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் உயிரிழப்பு
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா் உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கலைவாணன் மகன் சக்தி (22). இவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தாா். கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்த இவா் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினாா்.
வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல் சக்தியை நண்பா்கள் எழுப்பச் சென்றபோது சக்தி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவா் மீட்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, திருவாரூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

