அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
திருவாரூா்: குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சு. ராசேந்திரன் தலைமைவகித்து, மன்றத்தை தொடக்கிவைத்து பேசியது:
மாணவா்கள் எதையும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டும். மூடநம்பிக்கையை தவிா்க்க அறிவியல் அணுகுமுறை வேண்டும். நடைமுறை வாழ்வில் அறிவியல் முக்கிய பங்காற்றுவதை, மாணவா்கள் உணா்ந்து, அதன் உள்ளாா்ந்த அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
தங்களின் அறிவை வளா்த்து, ஆராய்ச்சியாளராக, பொறியியல் வல்லுநா்களாக, பொருளியல் மேதைகளாக, கண்டுபிடிப்பாளராக திகழ வேண்டும். அதற்கு அடிப்படையாக வானவில் மன்றம் விளங்குகிறது. இம்மன்றத்தின் மூலம் சிறு சிறு அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்படும் என்றாா்.
வானவில் மன்ற பொறுப்பு ஆசிரியா்கள் சிவநாயகி, மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த பட்டதாரி ஆசிரியா் ஜெகதீசன், வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா். வானவில் மன்ற ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் விஜய், அறிவியல் செயல்பாடுகளை மாணவ, மாணவிகளுக்கு செய்து காட்டினாா்.
