வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை
திருவாரூா்: வலங்கைமான் அருகே இடமில்லாதோருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வலங்கைமான் தாலுகாவுக்குள்பட்ட கிளியூா் வடக்குத்தெருவைச் சோ்ந்த மக்கள், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்;
வலங்கைமான் தாலுகா, கிளியூா் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 26 நபா்களுக்கு கடந்த 1980- இல் வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது.
இந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளன. கூலி வேலை செய்து பிழைக்கும் அனைவரும் வீடுகளை சீரமைக்க வசதியின்றி உள்ளனா்.
இந்நிலையில், கிளியூா் வருவாய் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலா் வீட்டுமனை வாங்கித்தருவதாக பணம் பெற்று வருகின்றனா்.
இதனால் குடியிருப்பு மனையில்லாமல் உள்ளவா்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, பணவசூல் குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், குடியிருக்க இடமில்லாமல் உள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

