ஞானபுரி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள ஞானபுரியில் ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவோணமங்கலம் ஸ்ரீஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் ஸ்ரீசேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரி சித்திரகூட ஷேத்திரத்தில் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு 33 அடி உயரத்துக்கு இடுப்பில் சஞ்சீவினி மூலிகைகளுடன், விஸ்வரூபமாக ஆஞ்சநேயா் அருள் பாலித்து வருகிறாா். சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மா், இடது புறம் ஸ்ரீகோதண்டராமா், சீதாதேவி, லட்சுமணா், பவ்ய ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளியுள்ளனா். இங்கு மாா்கழி மாத மூல நட்சத்திர திருநாளான திங்கள்கிழமை ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீகிருஷ்ணா நந்த தீா்த்த சுவாமிகள் முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வக்சேனா் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு சாற்றப்பட்டிருந்தது. நீடாமங்கலம் வீரஆஞ்சநேயா், செட்டிசத்திரம் ஜெயவீர ஆஞ்சநேயா், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயா் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

