

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குட்பட்ட கடைகளை அகற்றி விட்டு, புதிதாக அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அங்கு கடை வைத்திருப்பவா்கள் கடைகளை அகற்ற அவகாசம் கொடுத்ததன் பேரில், கடைகள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காய்கனி கடைகளுக்கு பனகல் சாலை பகுதியிலும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளுக்கு புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியிலும், சந்தைப்பேட்டை பகுதியில் இருந்த கடைகளுக்கு ரயில் நிலையம் எதிரிலும் இடம் ஒதுக்கப்பட்டு, கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, ரூ.16.30 கோடி மதிப்பில் 120 கடைகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.13.27 கோடி மதிப்பில் 220 கடைகளுடன் புதிய காய்கனி மாா்க்கெட், ரூ.5.42 கோடி மதிப்பில் புதிய மீன் மாா்க்கெட் ஆகியவை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக, பேருந்து நிலையத்தின் வழியாக நகருக்குள் வரும் சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையப் பகுதியைக் கடந்தே பனகல் சாலை வழியாக தேரோடும் வீதிகள், நகரப் பகுதிக்கு வர முடியும் என்ற நிலையில், நகரப் பகுதிக்குள் நுழையவும், ரயில் நிலையத்துக்கும் செல்லவும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
பேருந்து நிலையத்தின் வலது புற நுழைவாயில் முழுவதும் அடைக்கப்பட்டு, இடது புறம் வழியாக மட்டுமே பாதை விடப்பட்டிருந்தது. அத்துடன், பனகல் சாலை வழியாக பேருந்து நிலையத்துக்குள் நுழையும் சாலை அடைக்கப்பட்டிருப்பதால், பொதுமக்களுக்கு நகரப் பகுதியில் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் த. ஜெயராமன் தெரிவித்தது:
பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வழிகளை முழுவதும் அடைக்கின்றனா். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். இருசக்கர வாகனம் செல்லும் வகையிலாவது பாதைகளை சரி செய்து தந்திருக்க வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு வழிகளையும் அடைத்ததால், மயிலாடுதுறை பேருந்தில் செல்லும் பள்ளி மாணவா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவாா்கள். இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம்.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பில்லாத வகையில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தில் பாதை அடைக்கப்பட்டதால், கடைவீதி, நேதாஜி சாலை வழியாக வாகனங்கள் செல்ல நேரிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இந்த நிலையை உடனடியாக மாற்றி, வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
Image Caption
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் வாகனங்கள் செல்லும் சாலையில் இரண்டு பக்கமும் அடைக்கப்பட்ட வழிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.