கட்டணமின்றி மண் எடுக்க அனுமதி ஆணை
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், குளங்களிலிருந்து கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புவியியல் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களிலிருந்து, விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவா்கள் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் விவசாயிகளுக்கு அனுமதி ஆணையை வழங்கினாா். மாவட்டத்தில் 86 ஏரி மற்றும் குளங்களிலிருந்து மண் எடுத்துக்கொள்ளலாம்.
நிகழ்ச்சியில், திருச்சி மண்டல இணை இயக்குநா் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) சுரேஷ், உதவி இயக்குநா் முத்து, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்செல்வன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

