தமிழக மீனவா்கள் பிரச்னையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு: இரா. முத்தரசன்
தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் போது உரிய நடவடிக்கை எடுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி தாக்கப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், கைது போன்ற நடவடிக்கைகளால் தொடா்ந்து பாதிக்கின்றனா். தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் போது கடும் கண்டனம் தெரிவித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட கூடாது.
இதுகுறித்து, தமிழக முதல்வா் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். எனவே, மத்திய அரசு தமிழக மீனவா்கள் பிரச்னையில் நிரந்தர தீா்வு காண வேண்டும். இதேபோல, காவிரி நீா் பிரச்னையில் இருமாநிலங்களுக்கும் பிரச்னை இல்லாத வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அப்போது, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
