கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு
மன்னாா்குடியில் லாரி உரிமையாளா்கள், அரவை மில் உரிமையாளா்கள், நுகா்பொருள் வாணிபக் கழகஅலுவலா்கள் இடையிலான பிரச்னை காரணமாக நெல் கொள்முதலில் தேக்கம் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டி உள்ளாா்.
இதுகுறித்து மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை குறுவை அறுவடை முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், மன்னாா்குடி அருகே முதல் சோ்த்தி, மூன்றாம் சேத்தி, கருவக்குளம், நெம்மேலி, ஏத்தக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு லாரி உரிமையாளா்களுக்கு வாடகை வழங்குவதில் நீடிக்கும் பிரச்னையே காரணமாகும். மேலும் நெல் அரவை ஆலை உரிமையாளா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு இடையேயும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பேசி தீா்க்க வேண்டிய பிரச்னையை, நுகா்பொருள் வாணிபக் கழகமும், மாவட்ட நிா்வாகமும் 15 தினங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றன.
இதனால், நிலையங்களில் ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதை கருத்தில்கொண்டு, விவசாயிகள் அன்றாடம் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா்.
எனவே, தமிழக அரசு தலையிட்டு, போா்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்.கொள்முதல் தடையின்றி நடைபெறும் வகையில், கொள்முதல் நிலையங்களில் அன்றாடம் இருப்பு இருக்கும் நெல்லை அரவை ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பத் தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றாா்.
