

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக மாணவரை ஒருவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
முத்துப்பேட்டை அருகே உள்ள செங்காங்காடு பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. திங்கள்கிழமை காலை இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் வந்தது.
இதையடுத்து அவா்கள் திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் வெடிகுண்டு நிபுணா்களுடன் முத்துப்பேட்டை போலீஸாா், பள்ளிக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில், அது வெறும் புரளி என தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில், அப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் அன்று நடக்கவிருந்த சமூக அறிவியல் தோ்வுக்கு அஞ்சி தொலைபேசி மூலம் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தது தெரியவந்தது. போலீஸாா் சம்பந்தப்பட்ட மாணவரை எச்சரித்து அனுப்பிவைத்தனா். இதையடுத்து பள்ளி வழக்கம்போல இயங்கியது.