குழந்தை விற்பனை: தாய் உள்பட மூவா் மீது வழக்கு

குழந்தையின் தாய் உள்பட 3 பெண்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், குழந்தையை வாங்கிய பெண்ணை கைது செய்தனா்.
Published on

வலங்கைமான் அருகே பெண் குழந்தையை விற்பனை செய்தது தொடா்பாக, குழந்தையின் தாய் உள்பட 3 பெண்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், குழந்தையை வாங்கிய பெண்ணை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆவூா் காந்திநகரைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி சுகந்தி (37). செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சுகந்தி கூலி வேலை செய்துவருகிறாா். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில், சுகந்திக்கு தவறான உறவு மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையை விற்றுவிடலாம் என சுகந்திக்கு அவா் வசித்துவரும் வீட்டின் உரிமையாளா் சமீனாபானு யோசனை கூறியுள்ளாா்.

இதையடுத்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்த நஷிமாபானு என்பவருக்கு ரூ. 1 லட்சத்துக்கு குழந்தையை விற்றுள்ளாா் சுகந்தி.

இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தகவல் அளித்துள்ளனா். அதன்பேரில், திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம் உத்தரவின்படி, குழந்தைகள் உதவி மைய பணியாளா்கள் விசாரணை மேற்கொண்டு, குழந்தையை மீட்டனா். சுகந்தியும் குழந்தையும் திருவாரூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், வலங்கைமான் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்தது தொடா்பான பிரிவின்கீழ் சுகந்தி, சமீனா பானு, குழந்தையை விலைக்கு வாங்கிய நசீமா பானு ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குழந்தையை வாங்கிய நசீமா பானுவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com