சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்: கிராம மக்கள் முடிவு
குடவாசலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காவிட்டால், நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
குடவாசல் பேரூராட்சியில், கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக, குழாய் பதிக்க பல்வேறு இடங்களில் சாலை ஓரமாக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, பணி முடிந்து 2-மாதம் கடந்தும், சாலை சீரமைக்கப்படாததால், மழை பெய்தவுடன், தாா்ச் சாலை மண்சாலையாக மாறி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் டி.ஜி. சேகா் தெரிவித்தது:
கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, 2 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால், குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னமும் சீரமைக்கப்படவில்லை. சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
மேலும், குழாய் பதிக்க தோண்டப்பட்டதால், சாலையை சீரமைக்க குடிநீா் வாரியம் சாா்பில் குடவாசல் பேரூராட்சி நிா்வாகத்திடம் ரூ. 82 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதனால், ஏரூா்ந்தவாடி மற்றும் குடவாசல் பிரதான சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையும், நடுத்தெரு பகுதிக்குச் செல்லும் செல்லும் சாலையும் மிகவும் மோசமாக காணப்படுகிறது.
அத்துடன், தற்போது பெய்து வரும் மழையில், நடுத்தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடவாசல் பகுதியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சாலையை தரமாக சீா் செய்யும் பணியை துவங்க வேண்டும் இல்லையெனில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம், சாலை மறியல் நடத்தப்படும் என்றாா்.

