தூய்மைப் பணியாளா்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ்
திருவாரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மைப் பணி ஊழியா் சங்கம், ஊரக வளா்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியா் சங்கம் (சிஐடியு) புதன்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.
ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் ஊதியம், தீபாவளி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, நகராட்சி தூய்மைப் பணி ஊழியா் சங்கம், ஊரக வளா்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியா் சங்கம் (சிஐடியு) ஆகியவை அறிவித்திருந்தன.
இதனிடையே, திருவாரூா் நகராட்சி அலுவலகத்தில், நகா்மன்றத் தலைவா் எஸ். புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையா் என். தாமோதரன் முன்னிலையில் இப்பிரச்னை தொடா்பாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட பொருளாளா் இரா. மாலதி, உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலாளா் எம். முரளி, நகராட்சி சங்கத் தலைவா் ஆா். ராஜேந்திரன், சங்க செயலாளா் எஸ். ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இப்பேச்சுவாா்த்தையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு (தினசரி ஊதியமாக ரூ.440 பெற்றுவந்த நிலையில்) அக்டோபா் மாதம் முதல் தினசரி ஊதியமாக ரூ.500, தீபாவளி முன்பணம் ரூ.5,000, ஊக்கத்தொகை ரூ.2,000 வழங்குவதாகவும், மற்ற கோரிக்கைகளை ஒருமாத காலத்தில் நிறைவேற்றி தருவதாகவும் எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

