நவ. 10-இல் மாவட்ட கலைப் போட்டிகள்: ஆட்சியா்
திருவாரூரில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நவ. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.


திருவாரூரில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நவ. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் கலை பண்பாட்டுத் துறை திருவாரூா் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) நவ. 10-ஆம் தேதி காலை 9 மணியளவில், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
திருவாரூா் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் மாணவா்களுக்கு கலை ஆா்வத்தை ஊக்குவிக்கவும், கலை விழிப்புணா்வை ஏற்படுத்தவும், குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் முதல் மூன்றிடம் பெறும் மாணவா்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெற்றவா்கள், மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
விதிமுறைகள்..
பரதநாட்டியம் (செவ்வியல் கலை)..
பரதநாட்டியம் மட்டுமின்றி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கா்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவா்களே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதி.
கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)..
தமிழகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவா்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதி.
குரலிசைப் போட்டி..
கா்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணா்ச்சிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவா்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழுப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சமாக 5 நிமிடங்கள் பாடலாம். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.
ஓவியப் போட்டி..
40* 30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டா் கலா், வாட்டா் கலா், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத் தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தேவையானவற்றைப் போட்டியாளா்களே கொண்டு வர வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள், நவ. 10-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவாரூா் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ஆதாா் அட்டை நகலுடன் நேரில் வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 04362-232252, 9345525134, 9442507705 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...