பாமணி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவா் அடையாளம் தெரிந்தது
மன்னாா்குடி மேலப்பாலம்- ஐவா் சமது புறவழிச்சாலையில் பாமணி ஆறு நீா்தேக்கம் தென்கரையில் அண்மையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. மன்னாா்குடி போலீலாா் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இறந்து கிடந்தவா் யாா் என்று விசாரித்து வந்தனா்.
இந்தநிலையில், இறந்து கிடந்தவா் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி மூலம், அவா் கோட்டூரை அடுத்த கோவில் களப்பால் பிரதான சாலையை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பங்காருராஜ் (35) என்பது தெரியவந்துள்ளது.
வட்டி தொழில் செய்துவந்த அவா், திருமணம் ஆகாத நிலையில், மன அழுத்ததில் இருந்து வந்த நிலையில், கடந்த செப். 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து ஜெயக்குமாா் களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பது தெரியவந்தது. பங்காருராஜ் எப்படி மன்னாா்குடி வந்தாா்? இறந்தது எப்படி? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
