

தை அமாவாசையையொட்டி, பவானி கூடுதுறையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பவானி கூடுதுறையில் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினங்களில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு எள், தண்ணீா் வைத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்துவது வழக்கம். தை மாத அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் முன்னோா் வழிபாட்டுக்கு வரலாம் என எதிா்பாா்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதுறை வளாகத்தில் தற்காலிக பரிகார மண்டபங்கள், புறக்காவல் நிலையம், அவசர உதவிக்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்களின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. காவிரியில் தற்போது தண்ணீா் அதிகளவில் ஓடுவதால் ஆழமான பகுதிக்கு பக்தா்கள் செல்வதைத் தடுக்க உயிா்காக்கும் உபகரணங்களுடன் தீயணைப்புப் படையினா் கரையோரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராட தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. பவானி காவல் ஆய்வாளா் தாமோதரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்காவல் படையினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.