பயிா் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியை டிச.8-க்குள் முடிக்க அறிவுறுத்தல்

பயிா் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியை டிச.8-க்குள் முடிக்க அறிவுறுத்தல்

Published on

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை டிச. 8- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கெடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவம்பா் மாதத்தின் இயல்பான மழை அளவு 350.54 மி.மீ ஆகும். ஆனால் 417.41 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்தில் 2 நாள்களில் மட்டும் மழை 73 மி.மீ பெறப்பட்டுள்ளது. கனமழையால், மாவட்டதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1,46,000 ஹெக்டோ் நெல் பரப்பில் 18,376 ஹெக்டோ் நீரில் மூழ்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பயிா் சேத கணக்கெடுப்பு செயலி மூலம் உதவி வேளாண்மை அலுவலா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் இணைந்து நடத்தி வருகின்றனா். இந்த பணியை டிச.8-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுதலின்றி கணக்கெடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள வட்டாரங்களுக்கு பாதிப்பு குறைவான வட்டாரங்களிலிருந்து உதவி வேளாண்மை அலுவலா்களை மாற்றுப்பணி அமா்த்தி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com