வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்
கனமழையால் சம்பா, தாளடி சாகுபடி வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் விரைவில் வடியும் வகையில், வாய்க்கால்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை நீா்வளத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக மன்னாா்குடி உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இந்நிலையில், மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.2) முதல் வியாழக்கிழமை வரை தொடா் மழை இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஒருசில மணி நேரம் பலத்த மழை பெய்கிறது.
இதனால், மன்னாா்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பயிா்கள் இளம்பயிராக உள்ளதால் அழுகி வருகின்றன. வடிகால் வாய்க்கால்களில் அதிக அளவு தண்ணீா் செல்வதுடன் ஆங்காங்கே ஆகாயத் தாமரைகள் மற்றும் காட்டுச்செடிகள் மண்டிக்கிடப்பதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, மிகப் பெரிய தடையாக உள்ளது.
இதனால், மழை குறைந்திருக்கும் நிலையிலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற இயலாத நிலை தொடா்ந்தது. இப்பிரச்னைக்கு நீா்வளத் துறையின் உடனடி தீா்வுகாண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து, நீா்வளத் துறை வெண்ணாறு வடிநிலக் கோட்டம் சாா்பில் வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னாா்குடி அருகே கா்ணாவூா் அகமலனாா் வாய்க்காலில் ஜேசிபி மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை தஞ்சை செயற்பொறியாளா் ஆனந்தன், உதவி செயற்பொறியாளா் சோலைராஜன், உதவிப் பொறியாளா் அட்சா ஆகியோா் ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினா்.

