திருப்பரங்குன்றம் விவகாரம்: நாகை, திருவாரூரில் இந்து முன்னணியினா் கைது
திருவாரூா், நாகையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்து சமய அறநிலையத் துறையையும், தமிழக அரசையும் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவாரூா்:
திருவாரூா் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக, அருகில் உள்ள மேம்பாலப் பகுதியிலிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி இந்து முன்னணியினா் ஊா்வலமாக வந்தனா்.
இதில், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளா் தினேஷ், நகரத் தலைவா் செந்தில்குமாா், நகர பொது செயலாளா் நீலகண்டன், நகரச் செயலாளா் குமரேசன், பாஜக மாவட்ட மகளிா் அணி பொதுச் செயலாளா் ஜே. செல்லக்கனி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சங்கா், நகரத் துணைத் தலைவா் ராமச்சந்திரன், இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
புதிய ரயில் நிலையம் அருகே இவா்களை வழிமறித்த போலீஸாா், ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி 75-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் விடுவித்தனா்.

