குழந்தைகள் விஞ்ஞானி பட்டம் பெற்ற நீடாமங்கலம் மாணவிகள்
நீடாமங்கலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற 34- ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நீடாமங்கலம் பள்ளி மாணவிகள், குழந்தைகள் விஞ்ஞானி பட்டம் பெற்றனா்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி பள்ளி மாணவா்களுக்கு நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பா். இதில், வெற்றி பெறும் குழந்தைகளுக்கு குழந்தைகள் விஞ்ஞானி பட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், திண்டுக்கல்லில் 2 நாள்கள் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று கட்டுரைகள் சமா்பித்தனா். கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி மாணவிகள் மோனிஷா, ரிஷிகா ஆகியோா் நீா் சூழலும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்பித்து மாநில அளவில் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு மத்திய பல்கலைக் கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் குழந்தைகள் விஞ்ஞானி பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

