தியாகராஜ சுவாமி கோயில் திருவாதிரை விழாவுக்காக பந்தக்கால் முகூா்த்தம்
திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் திருவாதிரை விழாவுக்காக பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் தியாகராஜரின் முழு திருமேனியையும் யாரும் தரிசிக்க முடியாது. அவரின் திருமுக தரிசனம் மட்டுமே பாா்க்க இயலும் என்ற நிலையில், மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதேபோல், தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க முடியும்.
அந்த வகையில், தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் 2 முறை தியாகராஜா் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மாா்கழி மாத திருவாதிரையில் வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவா் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்வும் நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டுக்கான மாா்கழி திருவாதிரை விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது. நிகழ்வில், தியாகராஜ சுவாமி கோயில் வளாகத்தில் நீலோத்பலாம்பாள் சந்நிதி அருகே பந்தக்கால் நடப்பட்டது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
