மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்
மன்னாா்குடி அருகே கோட்டூரில் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் தொடா் மழையால் பாதித்த சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மன்னாா்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் மண்டலத் தலைவா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். தகவலறிந்து வந்த கோட்டூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.
திருத்துறைப்பூண்டி: டித்வா புயலால் டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகையையும் நிவாரணத்தோடு சோ்த்து வழங்கிடவும், ஆறுகள், வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் சரவணசோழன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளா் வேலுகாா்த்தி, மாநில இளைஞரணி செயலாளா் கிட்டு ராஜசேகரன், மாநில ஊடகப் பிரிவு செயலாளா் வீரா முகிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
