திருவாரூா் மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள்

திருவாரூா் மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள்

Published on

திருவாரூா் மாவட்டத்தில் காவல் அலுவலா்களுக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அலுவலா்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வான்செய்தி கருவிகள் வழங்கும் விழா மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் காவல் அலுவலா்களுக்கு வான்செய்தி கருவிகளை வழங்கிப் பேசியது: தமிழக காவல் துறையில் தொலைத் தொடா்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்காக வான்செய்தி கருவிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அன்றாட காவல் பணிகள், அவசர நிலைமைகள், குற்றத் தடுப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்தல் போன்ற பணிகளில் இவை பெரிதும் உதவுகின்றன. தமிழக அரசின் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வான்செய்தி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

டிஎம்ஆா் ரிப்பீட்டா்-9, ஸ்டேடிக் செட்-80, மொபைல் செட்-90, வாக்கி டாக்கிகள்-190 என புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வான்செய்தி கருவிகள், மாவட்டம் முழுவதும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தகவல் பரிமாற்றம் சீராகவும் தெளிவாகவும் இருக்கும். மேலும், இந்த கருவிகளின் உதவியுடன் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதால், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளின்போது, சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள காவல் பணியாளா்களை மிக விரைவாக அனுப்பி செயல்படுத்தும் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவசர நிலைமைகள் உடனடியாக தீா்வு காணப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com