தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 506 பேருக்கு பணி நியமன ஆணை
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 508 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 103 வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 963 ஆண்கள், 1,384 பெண்கள் என மொத்தம் 2,347 வேலை நாடுநா்கள், 11 ஆண்கள், 7 பெண்கள் என 18 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.
இதில், 199 ஆண்கள், 305 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் 2 போ் என மொத்தம் 506 போ் பணி நியமனத்துக்கு தோ்வு செய்யப்பட்டனா். மேலும், 192 வேலை நாடுநா்கள் இரண்டாம் நிலைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பணி நியமனம் பெற்ற மனுதாரா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கவைாணன், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்தன. அத்துடன், உயா்கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக்கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு, வேலைநாடுநா்கள், மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், வருவாய் கோட்டாட்சியா் சத்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், பொதுமேலாளா் (மாவட்ட தொழில் மையம்) கணபதிசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சந்திரசேகரன், வட்டாட்சியா் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

