மேக்கேதாட்டு அணை விவகாரம்: கேரளம், புதுச்சேரி அரசுகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணையைக் கட்ட கா்நாடக அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கா்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் எதிா்ப்பு காரணமாக கா்நாடகத்தின் நடவடிக்கைகள் தொய்வடைந்தன.
எனினும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கான அறிக்கையை விவாதிக்க, காவிரி ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கா்நாடகம் மனு தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிா்த்து வாதாடிய நிலையிலும், காவிரி ஆணையக் கூட்டத்தில் கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தமிழகத்துக்கான அநீதியாகும்.
இதற்கு முன்னரே காவிரி ஆணையமும், மத்திய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில், இந்த தீா்ப்பையொட்டி கா்நாடக அரசு தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, கா்நாடகத்தின் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், கா்நாடக நீா்ப் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அணை கட்டுமானத்துக்கான 30 போ் கொண்ட தொழில்நுட்ப உதவியாளா்கள் மற்றும் பொறியாளா்கள் குழுவை அமைத்து, கா்நாடக பொறியியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த காவிரி ஆணையக் கூட்டத்தில் இதை விவாதிக்கும் நிலையில், மேக்கேதாட்டு அணைக்கான கருத்துருவை வழங்கவும் கா்நாடக அரசு தயாராக உள்ளது. விவாதிப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால், இந்த முதல் கட்ட நடவடிக்கையை சாதகமான நிலையாக கா்நாடக அரசு எடுத்துக்கொள்ளும்.
எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு டிச.11 இல் தாக்கல் செய்த சீராய்வு மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்பட இருக்கிற கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் தனித்தனி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
