100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை மாற்றக்கூடாது
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடம்பெறும் காந்தி பெயரை மாற்றாமல் பழைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் திருவாரூா் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்தும் மாற்றங்களை வன்மையாக கண்டிக்கிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பழைய நடைமுறை அப்படியே தொடர வேண்டும்.
ரேசன் கடைகளில் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் நடைமுறையில் பல சிரமங்களை குறிப்பாக வயதானவா்கள், கூலித் தொழிலாளிகள் அனுபவித்து வருகின்றனா். ரேகை தேய்ந்து போனதால் அதை பயன்படுத்துவதில் சிக்கல்கள் நிலவுகிறது. உடனடியாக எளிய முறையில் ரேஷன் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வா் உடனடியாக சட்டப் பேரவையை கூட்டி இந்து கோயில்களில் வழிபாட்டு முறைகள், தீபம், சஷ்டி போன்ற விழா முறைகள் அனைத்திலும் தற்போதுள்ள நடைமுறையை தொடர சட்டம் இயற்றி உரிய சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதிமுக பொதுச் செயலா் வைகோ ஜன.2-ஆம் தேதி திருச்சியில் தொடங்கி 12-ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்யும் சமத்துவத்தை வலியுறுத்தியும் போதைப் பொருள்களுக்கு எதிரான நடைப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு திருவாரூா் மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்பது, கட்சி வளா்ச்சி நிதி வசூலித்து வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவா் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் கோவி. சேகா், மாவட்டத் துணைச் செயலா் ப. செந்தில்முருகன் முன்னிலை வகித்தனா். மதிமுக மாநிலப் பொருளாளா் மு. செந்திலதிபன், மாவட்டச் செயலா் ப. பாலச்சந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டா். பொதுக்குழு உறுப்பினா் வி. பாலையன் வரவேற்றாா். நகரச் செயலா் சண். சரவணன் நன்றி கூறினாா்.

