எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் நூல்களை அரசுடமையாக்கக் கோரிக்கை
வண்டல் எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் நூல்களை அரசுடமையாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை கோரிக்கை மனுவாக, மாவட்ட நிா்வாகிகள் எம். சௌந்தரராஜன், ஜி.வெங்கடேசன், யு.எஸ். பொன்முடி ஆகியோா் வியாழக்கிழமை மாலை வழங்கினா்.
கோரிக்கை விவரம்:
திருவாரூா் நகரத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, கலை, இலக்கியம், நடனம், நாடகம் சாா்ந்த நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கு தனி திறந்தவெளி கலை அரங்கம் அமைத்துத் தர வேண்டும். வண்டல் எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் படைப்பு நூல்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தமதானபுரத்தில் உள்ள தமிழ்த்தாத்தா உவே.சா. நினைவு இல்லத்தை புதுப்பித்துத் தர வேண்டும். திருத்துறைப்பூண்டியில் உள்ள விடுதலை போராட்ட வீரா் பி. சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தை அனைவரும் பயன்படுத்தும்படி ஆய்வு நூலகமாக சீரமைத்துத் தர வேண்டும். மன்னாா்குடியில் நடமாடும் நூலகம் ஏற்படுத்திய
சு.வி. கனகசபை நினைவாகவும், விடுதலைப் போராட்ட காலத்தில் மன்னாா்குடி மேலநாகையில் தலைமறைவாக இருந்த மகாகவி பாரதியாா் நினைவாகவும் மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள நலிந்த நாட்டுப்புற கலைஞா்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தர வேண்டும். குடவாசல் கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும். நீடாமங்கலத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கி.பி, 17- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை மராட்டிய யமுனாம்பாள் அரண்மனையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
