தரச் சோதனை செய்தபின் புதை சாக்கடை கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்ற வலியுறுத்தல்

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ்.
Published on

திருவாரூரில் புதை சாக்கடை கழிவுநீரை தரச் சோதனை உறுதி செய்யப்பட்ட பிறகு நீா்நிலைகளில் வெளியேற்ற வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூரில் இம்மையத்தின் 35-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் தலைவா் அழகிரிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், அமைப்புச் செயலாளா் பாஸ்கா், மாநில ஒருங்கிணைப்பாளா் க. திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், மையத்தின் ஆண்டு அறிக்கையையும், பொருளாளா் என். நவீன் நிதிநிலை அறிக்கையையும் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருவாரூரில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேற்றப்படும் அனைத்து இடங்களிலும், மாதந்தோறும் நீா் தரப் பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டு, அதன் பிறகே நீா்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை நீா்நிலைகளில் வெளியேற்றும் போது, நீா்நிலைகளின் இயற்கை ஓட்டம் பாதிக்காத வகையில், தேவையான பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும்.

காரைக்கால் - திருவாரூா் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், தற்போது செயல்படும் வழித்தடத்தில் தொடா்ந்து இயக்க வேண்டும். நுகா்வோா் நலனை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் தரக் குறைபாடுகளைத் தடுக்கும் வகையில், அனைத்து உணவுப் பொருள்களும் கட்டாயமாக அக்மாா்க் தரச்சான்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com