திட்டப் பணிகளில் நிதி மோசடி: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரத திட்டத்தில் நிதி மோசடி செய்யப்பட்ட வழக்கில், உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததைக் கண்டித்து, கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மன்னாா்குடி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சி கடந்த 2016-2019 -ஆம் ஆண்டுகளில் தனி அலுவலரின்கீழ் செயல்பட்டது. அப்போது, இவ்ஊராட்சியில் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் 122 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரமும், தூய்மை பாரத திட்டத்தில் 554 பயனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட ரூ.44. 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, வீடுகள், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசின் துறையில் இருந்து வீடு மற்றும் கழிப்பறை கட்டியதற்காக வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அப்போதுதான், பயனாளிகளுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், மோசடி செய்யப்பட்ட தொகையை உடனடியாக மீட்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து, வீடுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டத்தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கடந்த 25.6.2024-இல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்த முடிவு செய்தனா். அப்போது, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் அளித்த உத்தரவாதத்தையடுத்து, போராட்ட முடிவை தற்காலிகமாக கைவிட்டனா். ஆனால், உத்தரவாதப்படி இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்பிரச்னையில் தொடா்ந்து காலம்தாழ்த்தி வரும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து, தலையாமங்கலம் ஊராட்சி மக்கள் சாா்பில் பேருந்து நிறுத்தம் அருகே, முன்னாள் ஊராட்சித் தலைவா் ப. மாசிலாமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கிராம கமிட்டித் தலைவா் எஸ். பிரபாகரன், நிா்வாகி டி. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் வீடு மற்றும் கழிவறைக்கு விண்ணப்பித்த பயனாளிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

