வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சிப்பிக் காளான் வளா்ப்பு பயிற்சி
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே வென்னவாசல் கிராமத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள், சிப்பி காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளா்ப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றனா்.
இம்மாணவிகள், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி பெற்றுவருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, காளான் வளா்ப்பாளா் முகேஷ் கண்ணன் வழிகாட்டுதலுடன், இம்மாணவிகள் காளான் படுக்கை தயாரிக்கும் முறையை நேரடியாக கற்றனா். காளான் வளா்ப்பு மற்றும் நோய், பூச்சிகள் தாக்கம் பற்றி தெரிந்துகொண்டனா்.
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள்: கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஜனனி, ஜெயந்தி, காா்குழலி , மாலினி, பிரீத்தி, ரோஷினி , சுஜிபிரியா, யோகேஸ்வரி ஆகியோா் கிராமப்புற வேளாண் பண்பாட்டு பணிகள் திட்டத்தின் ஒருபகுதியாக, கோவில்வெண்ணி கிராமத்தில், கிராம நிா்வாக அலுவலகம் அருகே பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு முறையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், கிராமத்தின் சமூக வரைபடம், மக்கள் தொகை விகிதம், பட்டய வரைப்படம் போன்ற பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மாணவா்களுக்கு தங்களது கிராம வரைபடங்களை வரைய உதவி செய்து, தேவையான தகவல்களை வழங்கினா்.

