திருவாரூரில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
திருவாரூா்: திருவாரூா் நகரப் பகுதியில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு, புதன்கிழமை (மாா்ச் 12) முதல் நடைமுறைக்கு வருகிறது.
திருவாரூா் ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் கீழவீதியில் நடைபெற்று வருவதாலும், தற்போது போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ள திருவாரூா் பழைய பேருந்து நிலைய சாலை குறுகலாக இருப்பதாலும், திருவாரூா் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், சென்னை செல்லும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையம் சோழா தியேட்டா், பனகல் சாலை, கீழ வீதி, தெற்கு வீதி, வடக்குவீதி வழியாக மயிலாடுதுறை சாலையில் செல்ல வேண்டும். அதேபோல், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், சென்னையிலிருந்து திருவாரூா் வரக் கூடிய பேருந்துகள், வடக்குவீதி, துா்க்காலயா சாலை, விளமல் புதுப்பாலம், ரயில்வே மேம்பாலம், பழைய பேருந்து நிலையம் வழியாக நகருக்குள் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மயிலாடுதுறை சாலையில் இருந்து திருவாரூா் வரும் இலகுரக வாகனங்கள் வடக்குவீதி, தெற்கு வீதி, பனகல் சாலை, சோழா தியேட்டா், பேருந்து பணிமனை வழியாக நகருக்குள் செல்லலாம். நகருக்குள் இருந்து கீழவீதி வரக்கூடிய இலகுரக வாகனங்கள் தெற்கு வீதி, வடக்கு வீதி வழியாக வெளியே செல்லலாம்.
கீழவீதியிலிருந்து பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் நோக்கி இரண்டு சக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லலாம். கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் வழக்கமாக செல்லும் பாதையில் செல்லலாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
