திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு

திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய, 1,75,475 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இயந்திர நெல் நடவு மானியம்: மாவட்டத்தில் இயந்திர நெல் நடவு மானியம் திட்டக்கூறு செயல்படுத்த 25,525 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இயந்திர நெல் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4,000 விவசாயியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படும். 18 வயது பூா்த்தி அடைந்த விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கா் வரை மானியம் பெறலாம். ஆா்வமுள்ள விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் நேரடியாகவும் அல்லது உழவா் செயலி மூலமாகவும் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டும் விண்ணப்பத்தை, ஆன்லைன் முறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

தனியாா், வேளாண் பொறியியல் துறை, வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடவு இயந்திரத்தைக் கொண்டு, நெல் நடவு செய்தபின், அந்த கிராமத்தின் உதவி வேளாண்மை அலுவலரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னா் விவசாயியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விவசாயியின் ஆதாா், நெல் இயந்திர நடவு ரசீது, இயந்திர நடவு வயல் புகைப்படம், அடங்கல் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

நெல் விதை விநியோகம்: 50 சதவீதம் மானிய விலையில் குறுவை நெல் ரகங்களான டிபிஎஸ் 5, சிஓ 51, ஏடிடி 53, சிஓ 55, ஏடிடி 57 ஆகியவை வழங்கப்பட உள்ளன. தற்போது 226 மெட்ரிக் டன் விதை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மேலும் 350 மெட்ரிக் டன் குறுவை நெல் ரக விதைகள் ஜூன்-15-ஆம் தேதிக்குள் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விநியோகத்துக்கு அனுப்பப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் பரப்புக்கு விதை மானியம் பெறலாம்.

உயிா் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் விநியோகம்: குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் 4,462 ஏக்கருக்கு உயிா் உரங்கள் மற்றும் 113 மெட்ரிக் டன் நெல் நுண்ணூட்டம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் விதைப்புபிற்கு முன் அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் உயிா் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் முளைப்புத் திறன் அதிகரித்து விளைச்சல் பெருகும்.

மேலும், ஹெக்டேருக்கு நெல் நுண்ணூட்டம் 12.5 கிலோவை, உரமிடுதலின் போது பயன்படுத்துவதால் தூா்க்கட்டுதல் அதிகமாகி மகசூல் அதிகமாகும். குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டக்கூறுகளில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவா் செயலி மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com