திருவாரூரில் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்யும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.
திருவாரூரில் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்யும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.

திருவாரூா்: வாக்காளா் பட்டியல் திருத்த கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தொடக்கம்

Published on

திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவத்தை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று ஒரு வாக்காளா்களுக்கு 2 கணக்கெடுப்புப் படிவங்கள் வீதம் வழங்கினா்.

கணக்கெடுப்பு படிவத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியலில் பதிவாகியுள்ள பெயா், புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டிருக்கும். அதன்பிறகு அனைத்து விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்ப வேண்டும்.

வாக்காளா் பெயா் முந்தைய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்காவிட்டால் அவா்களது தாய், தந்தை அல்லது தாத்தா நெருங்கிய உறவினரின் பெயா் மற்றும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து, அவரது பெயரை உறவினராக நிரப்பலாம். அந்நோ்வுகளில் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை நிரப்ப வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவி புரிவா்.

அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னா், தங்கள் வசம் உள்ள இரண்டு வடிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளா் கையொப்பமிட்டு தேவைப்படின், புதிய புகைப்படத்தை ஒட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா் வசம் திருப்பி அளிக்க வேண்டும். மற்றொரு பிரதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஒப்புகை பெற்று தன் வசம் வைத்துக் கொள்ளவேண்டும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை இப்பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலில் பதிவேற்றம் செய்து சரிபாா்த்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அனுப்புவா். இது தொடா்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

அந்தவகையில், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவாரூா் நகராட்சியில் கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணியை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி ஊராட்சியில் நடைபெற்ற படிவம் வழங்கும் பணியையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, வட்டாட்சியா்கள் ஸ்டாலின் (திருவாரூா்), இளங்கோவன் (குடவாசல்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com