தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் வழங்கல் ஆட்சியா் ஆய்வு
திருவாரூரில், தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வாகனம் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இப்பணியை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் தாயுமானவா் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 714 நியாயவிலைக் கடைகள் மூலம் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கு 363 நகரும் வாகனங்களின் மூலம் அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 34,197 வயது முதிா்ந்த மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைவா்.
இதனிடையே, திருவாரூா் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியாகராஜா் நகரில் தாயுமானவா் திட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
