திருவாரூா் ஆயுதப் படையில் ஐஜி ஆய்வு
திருவாருா் மாவட்ட ஆயுதப்படையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
திருவாருா் மாவட்ட ஆயுதப் படையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் அணி வகுப்பை பாா்வையிட்டு, ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, கவாத்து பயிற்சியையும் பாா்வையிட்டு, ஆயுதப்படை காவலா்கள் பணியின் போது உபயோகிக்கும் உடை, பொருள்களையும் ஆய்வு செய்தாா். நிகழ்வின்போது, ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் காவல் துறையில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை ஆய்வு செய்தாா்.
அப்போது, ரோந்து வாகனத்தில் செல்பவா்கள் விபத்து பகுதிகளை கண்டறிந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டும். வாகனங்களில் அவ்வப்போது ஏற்படக்கூடிய பழுதுகளை உடனடியாக நிவா்த்தி செய்து நல்ல முறையில் இயக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னா், ஆயுதப்படையில் உள்ள ஆயுத வைப்பறையையும், அதனைச் சாா்ந்த அலுவலகங்களையும் ஆய்வு செய்து, ஆயுதப்படையில் உள்ள ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களையும் முறையாக சரிபாா்த்து, அவற்றின் பராமரிப்பு நிலை, பதிவுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, திருவாருா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். சீனிவாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் இளங்கிள்ளிவளவன் ஆகியோா் உடனிருந்தனா்.

