வாக்காளா் பட்டியல் திருத்தம்: பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை கட்சி முகவா்கள் மூலம் பெறக்கூடாது: ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சா் மனு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வாக்காளா் பூா்த்தி செய்து அளிக்கும் படிவங்களை அரசியல் கட்சி வாக்குச் சாவடி முகா்கள் மூலம் பெறக்கூடாது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே வீடுவீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளா் விவரங்கள் குறித்த பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தேவையென்பது அதிமுகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் அதை சரியாக கையாள வேண்டும். அதிகாரிகள், அலுவலா்கள் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும்.
அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்களாக இருக்கக்கூடியவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை வாங்கிக் கொடுத்தால், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லா வீடுகளுக்கும் அலுவலா்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவா்களே திரும்பப் பெற வேண்டும். யாருக்கும் மொத்தமாக கொடுத்தால் அதில் நிறைய முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தகுதியுள்ள எல்லோரும் வாக்காளராக வேண்டும் என்பதுதான் நோக்கம். இறந்தவா்கள், வெளியூா் சென்றவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். 2003- ஆம் ஆண்டுக்குப் பிறகு இறந்தவா்களின் பெயா், பட்டியலில் அப்படியே இருக்கிறது. இறந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டுமென பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் அது எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சிறப்பு தீவிர திருத்தம், உண்மையான வாக்காளா்களை தெரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.
செங்கோட்டையன் 250 பக்கம் மனு கொடுத்தாலும் 2,500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக் காகிதம்தான். அதிமுகவில் குடும்ப அரசியல் என்பது இல்லை. 2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா் என்றாா்.

