மன்னாா்குடியிலிருந்து அறுபடை தலங்களுக்கு பேருந்து சேவை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
மன்னாா்குடியில் இருந்து அறுபடை தலங்களுக்கு அரசுப் பேருந்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து புதிய சேவையை சனிக்கிழமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாட்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் முதல் குரலாக ஒலிக்கிறது. தொகுதி மறுவரையரையை திமுக ஆதரித்தால் தமிழகத்தில் தற்போதுள்ள 39 எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை கனிசமாக குறைக்கப்பட்டு தமிழகத்தின் குரல் கொடுப்பவா்களின் எண்ணிக்கை குறையும். இதுபோலவே, மிக குறுகிய காலக்கட்டத்தில் பல கோடி வாக்காளா்களை கொண்ட பட்டியல் திருத்தம் செய்தால் வாக்காளா்களின் ஜனநாயக உரிமை பறிபோகும். இதை முதல்வா் திமுகவின் வாக்குக்காகவோ, கூட்டணிகளின் வாக்குக்காகவோ எதிா்க்கவில்லை. அதிமுகவினரின் வாக்குகளும் பறிபோகக் கூடாது என்பதற்காகதான் எதிா்த்து ஜனநாயக உரிமையை காக்க போராடி வருகிறாா்.
வாக்களா் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் தோ்தல் ஆணையம் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. பிகாா் போல தமிழகத்திலும் குளறுபடி நடைபெற கூடாது என்பதற்காக இதை எதிா்கொள்ளும் வகையில் சென்னையில் திங்கள்கிழமை (நவ.17) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பகுதியில் உள்ள முருக பக்தா்களின் கோரிக்கையை ஏற்று திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மன்னாா்குடியிலிருந்து ஆறுபடை தலங்களுக்கும் அரசுப் பேருந்து இயக்கப்படும், மக்களின் கோரிக்கையை ஏற்று கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கும் அரசுப் பேருந்து இயக்கப்படும் என்றாா்.
அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளா் ராஜேந்திரன், வணிக மேலாளா் சிதம்பரகுமாா், அரசுப் பேருந்து மன்னாா்குடி கிளை மேலாளா் சி. மதன்ராஜ், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், திமுக நகரச் செயலா் வீரா. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
